Wednesday 13 May 2020

யுகா-1


யுகா-1
மேஜிக்கல் ரியாலிசம்,போஸ்ட் மாடர்னிசம் என்று வகைவகையான இசங்கள் மேற்கத்திய இலக்கிய மரபில் தோன்றி விரக்திப்பெருமூச்சு விட்டு மறைந்து, மியூசியம் பொருள் ஆனாலும், மகாபாரதம் எல்லா இசங்களின் சாராம்சமாகி இன்றும் நிற்கிறது. பாரத பூமி அந்த மஹா இதிகாசத்திடமிருந்து இன்றும் பாடம் பெற்றுக்கொண்டே இருக்கிறது. ஏறக்குறைய உலக இதிகாசங்களை ஆங்கிலத்தில் படித்திருந்தாலும் ஈடிணையற்ற அதன் செல்வாக்கை கிராமங்களின் திரௌபதி அம்மன் கோயில் வரை உற்று கவனித்து வருகிறேன்..தமிழ் உட்பட பல மொழிகளில் பல பார்வைகளில்   மகாபாரதம் எழுதப்பட்டு வந்தாலும் இன்னும் ஓர் நிறைவின்மை உணர்ந்து  பரம்பொருளைப் பிரார்த்தித்து அதை யுகா என்ற பெயரில் நாவல் வடிவில் கதாபாத்திரங்களுக்கு உரிய குணாம்சம் கொடுத்து நான் எழுதத்தொடங்குகிறேன். 
யுகா -1

மீண்டும் ,மீண்டும் என்னை ஏன் தொல்லை செய்கிறாய் கண்ணா? நான் வரமாட்டேன் உயிர் ஊசலாடிக்கொண்டிருக்கும் அந்தக்கிழவரைப் பார்க்க

கிழவர் என்று சொல்லாதே பாஞ்சாலி! அவர் பிதாமகர்.இதோ கேட்கிற  யுத்தத்தின் சப்தங்களுக்கெல்லாம் காரணகர்த்தா. வெற்றியும் தோல்வியுமாக விழுந்து எழுந்து கூச்சலிடும் வீரர்களின் தலைவிதியை நிர்ணயித்த தீராதி தீரர்.
இவ்வளவு தானா..இல்லை இன்னும் வர்ணிக்கப்போகிறாயா?‘
கேள்.இந்த வம்சத்தின் வித்து முளைத்துக்கிளைத்து விருட்சமாகத் தனது  வாழ்க்கையே தாரை வார்த்தவர் அவர் . தந்தை ஒரு பெண்ணை நாடினார் என்பதற்காக அவரது இச்சை தீர்ப்பதற்கு தம் அரசுரிமையையே துறந்து ,தீவிர  பிரம்மச்சரிய விரதமேற்றவர். தந்தை மறைந்தபின்னால் அந்த வம்சம் நிலைத்து நிற்கத் தலைமுறைகளை உடனிருந்து வளர்த்துக் காத்தவர்.
 கண்ணா! நடந்துகொண்டிருக்கிற இந்த பாரத யுத்தம் எப்போது முடியும்?”
நான் ஏதோ கேட்கிறேன்.நீ வேறு கேள்வி கேட்டு  என் சிந்தனையைத் திசை திருப்பப்பார்க்கிறாய்
எல்லார் திசையையும் திருப்பிக்கொண்டிருக்கும் பொல்லாதவன் நீ .நான் எப்படி உன்னைத் திசை திருப்புவது? என் கேள்விக்குப் பதில் சொல்!
முடிகிறவேளை வேளை வந்தால் முடியும்!
உன் கிண்டல் உன்னைவிட்டுப் போகாதே!
நான் கிண்டல் செய்யவில்லை. உண்மையே  அது தான்  உன் கூந்தலை நீ முடியும்போது யுத்தம் முடியும் !
பாஞ்சாலி கலகலவென்று சிரித்தாள்.
கூந்தலை நான் எப்போது முடிவது? யுத்தம் என்றைக்கு முடியும்?‘
உன் கேள்விக்கு நான் பதில் சொல்வது இருக்கட்டும் .என் கேள்விக்கு என்ன பதில்? என் பக்தை..என் பக்தை என்று சொல்லிக்கொள்கிறாய். உன் அளவுக்கு என் மீது பக்தி செலுத்திக்கொண்டிருக்கும் பீஷ்மரைச் சந்திக்க ஏன் வரமறுக்கிறாய்?‘
என்னமோ உள்நோக்கத்தோடு தான் என்னை அங்கே கூப்பிடுகிறாய்!
அம்புப்படுக்கையில் படுத்து உத்தராயணத்தை எதிர்பார்த்து மரணத்துக்குக்  காத்திருக்கும் மனிதரிடம் எனக்கென்ன வேண்டியிருக்கிறது?‘
உன் கணவர்கள் ஐவரும் அவரைக்காணப் போயிருக்கிறார்கள்!
 அவர்களுக்கு ராஜநீதிக்கான அறிவுரை தேவை! அதனால் .போயிருக்கிறார்கள்!
 உனக்கு உன் கூந்தல் முடிவதைத் தவிர வேறொன்றும் தேவையில்லையா?‘
கிருஷ்ணா! பரமாத்மா!துரியோதனனின் அவையில் நடந்ததை மறக்கச்சொல்கிறாயா?‘
அதன் விளைவைத்தான் குருக்ஷேத்ரம் சந்திக்கிறதே!
 இதோ மரணத்தை எதிர்பார்க்கிற அந்த மஹாபுருஷர் அப்போது அங்கு தானே இருந்தார்!
 பாஞ்சாலி,  முக்தி அடையப்போகும் மனித ஜீவனிடம் வன்மத்தைக் காட்டக்கூடாது
இது வன்மம் அல்ல. தர்மத்தின் சீற்றம்.சூதாட்டம் ஒரு தீமை என்று தெரிந்தும் துரியோதனனின் துரோகபுத்தியை அறிந்திருந்தும் தடுக்காதவர்  அவர்,  ஆண்களே கூடியிருந்த அவையில் என் துகிலை அந்த மஹாபாதகன் துச்சாசனன் உரிய முயன்றான் அப்போதும் பார்த்துக்கொண்டு தானே இருந்தார். என் மானத்தை நீ காத்தாய். என் மானம் போனால் போகட்டும் என்று அந்த பிதாமகர் வேடிக்கை பார்த்தார். அவரை நான் வந்து பார்க்க வேண்டுமா ?‘
‘.....................‘
ஏன் தலை குனிகிறாய் கண்ணா?பதில் சொல்
அவரிடமே வந்து கேள்! மரணத்திற்கு முன் தனது  செய்கையின் நியாயத்தை அவர் உனக்குப் புரியவைத்தால் உனக்கும் சாந்தி. அவருக்கும் ஆத்ம சாந்தி.
‘ .உனக்கு நான் வரவேண்டும் நீ நினைப்பது நடக்க வேண்டும் !சரி வா போவோம்
பாஞ்சாலி மீண்டும் சிரித்தாள்
.‘நெருங்கிவிட்டோமா?‘
 ஆம்,அதோ உன் கணவன் அர்ஜுனன். கையில் வில்லேந்தி நிற்கிறான்
 ஏன் அவர் வில் பூமியைக்குறி பார்த்துக்கொண்டிருக்கிறது
அதோ, பீஷ்மரின் குரல் கேட்கவில்லையா?‘  ,
அர்ஜுனா! தாகமாக இருக்கிறது!”.
இதோ!
 பாஞ்சாலி! பூமியின் உள்ளிருந்து கங்கை நீர் விர்ரெனப் புறப்பட்டு வெளியே வந்து கொட்டுவதைப் பார்
‘....................‘
கங்கா  பீஷ்மரின் தாய். பாய்ந்து வரும் அந்த நீரின் வேகத்தில் தாயின் தாபமும் பாசமும் உனக்குத் தெரியவில்லையா?நீயும் தாய் தானே!
ஏழு குழந்தைகளை நதியில் மூழ்கடித்து எட்டாவதைக் கணவனின் கட்டாயத்தால் தப்பவிட்ட தாய் அல்ல நான்!
விமரிசனம் செய்யாதே!  மரணப் படுக்கையிலிருக்கும் வயோதிகர் முன் சற்றேனும் மரியாதை காட்டு. அதுவும் உன் கணவர்களுக்கு அவர் ராஜ தர்மத்தைப் போதிக்கும் வேளையில்.
 .........................‘
 பாஞ்சாலி மீண்டும் சிரித்தாள்.
யாரோ பெண் சிரித்த சிரிப்புச் சப்தம் கேட்கிறதே? என்னால் தலையைத்திருப்பிப் பார்க்கமுடியாது .சிரித்தவள் என் முன்னே வரட்டும்!
“”நான்தான் சிரித்தேன் பிதாமகரே !
“”திரவுபதி!  அன்று நிலமிருக்கும் இடத்தில் ஆடையைத் தூக்கி நடந்த துரியோதனன்  நீரிருக்கும் இடத்தை  நிலமென நினைத்து தொப்பென்று விழுந்து நனைந்ததற்கு  சிரித்தாய் நீ. அன்று அவன் நெஞ்சில் மூண்ட  வெஞ்சினம் தானே இன்று  பாரதப் போராய் மூண்டிருக்கிறது ? . இப்போது ஏன் சிரித்தாய்?”
பிதாமகரே,அன்று சிரித்தது அறியாமை.தடுக்கிவிழுந்தவர்களைப் பார்த்துச் சிரிக்கக்கூடாது  என்று தெரியாத அறிவீனம்
இன்று சிரித்தது?”
தர்மங்களைப்  போதிக்க இன்று உங்களுக்கு இருக்கும் தகுதி அன்று அரசவையில் துச்சாதனன் துகிலுரிய முயன்றபோது  எங்கே போயிற்று?ஏன் கண்மூடிக்கொண்டது? இன்று தர்மம் பேசுகிறீர்களே, அன்று ஏன் அதர்மத்திற்கு எதிராகக் குரல் கொடுக்காமல் மௌனமாகி விட்டது?‘
‘........................‘
கண்ணா, வற்புறுத்தி என்னை பிதாமகரைப் பார்க்க அழைத்து வந்தாயே, மீண்டும் இவர் இப்படி சாதிக்கிற  மௌனத்தைச்சந்திக்கவா?‘
பொறு.பாஞ்சாலி! கிருஷ்ணனுக்கு எல்லாம் தெரியும்.என் மௌனத்தின் காரணம் நன்றாய்த் தெரியும்.என் வாயால் நான் அதைச் சொல்லவேண்டும். நீ செவியாரக்கேட்க வேண்டும் என்று தான் அழைத்து வந்திருக்கிறார்
சொல்லுங்கள்.பிதாமகரே .
அன்று நான் உண்ட உணவு துரியோதனுடையது. அந்த உணவின் அடிமை நான். உண்ட உணவுக்கு எல்லா உயிரும் அடிமை.என் வாய் அதனால் அடைத்து விட்டது.அதில் இருந்த நஞ்சு என்னைப் பேசவிடவில்லை
இன்று அந்த நஞ்சு வெளியேறி விட்டதா?‘
ஆம், உன் மணாளன் அர்ஜுனன் என்னைச்சல்லடையாய்த் துளைத்து அந்த நஞ்சில் ஊறிய குருதியை எல்லாம் அகற்றிவிட்டான்.இப்போது ஊறுவது புதிய ரத்தம்.            
‘....................‘
பாஞ்சாலி ..பாஞ்சாலி.. ஏன் அழுகிறாய்?‘
நான் பெண். சிரிக்கவேண்டிய நேரத்தில்  அழுவேன். அழவேண்டிய நேரத்தில் சிரிப்பேன்.‘’
இப்போது ஏன் அழுகிறாய்?‘
நான் ஒன்றைப் புரிந்துகொள்ளவேண்டும் என்ற எண்ணத்தோடு நான் முரண்டு பிடித்ததைப் பொருட்படுத்தாமல் உங்களைச் சந்திக்க அழைத்து வந்த கண்ணபிரானின் பிடிவாதமான அன்பை  எண்ணி.
என்ன புரிந்துகொண்டாய்?‘
தீயோர் சகவாசம் மட்டுமல்ல,அவர்கள் இடும் உணவிலும் தீமையின் விஷம் கலந்திருக்கும் என்பதை!
‘..................‘
என்னை மன்னியுங்கள் பிதாமகரே! நான் சிரிக்காமல் இருந்திருந்தால் இந்த பாரத யுத்தம் நடக்காமல் போயிருக்கலாம்.
நான்..நான்..பெண்.. பெண். நான் என்று நினைத்தால் அந்த நானாகிய நீ பெண்ணாகிறாய்.
வேறு எப்படி நினைக்கட்டும்?‘ 
கண்ணன் உனக்குத் துணையிருக்கிறான்.  நீ பாக்கியவதி.ஆகையால் எல்லாம் கிருஷ்ணார்ப்பணம் என்று நினை
கிருஷ்ணார்ப்பணம்
மீண்டும் ஒருமுறை பாஞ்சாலி சிரித்தாள். சாந்தமாக.நிறைவாக.
simpleyug.blogspot.com